A35 வீதியில் முதலாவது பாலம் மக்கள் பாவனைக்குத் திறக்கப்பட்டது
Reported by Ada Derana
11 hours ago
கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன்-முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள முதலாவது பாலம் இன்று (28) திறந்து வைக்கப்பட்டது. 40 மீற்றர் நீளமான இப்பாலம், 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையால் 206 மில்லியன் ரூபா செலவில் புணரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியின் 12 ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமான முதலாவது பாலம் இன்று (28) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பாலம் புளியம்பொக்கனைப் பகுதியில் 6 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முன்னைய ஆட்சியாளர்களால் இப்பாலத்தின் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் இடைநிறுத்தப்பட்டு கிடந்தன. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையால் 206 மில்லியன் ரூபா செலவில் புணரமைப்புப் பணிகள் நிறைவடைந்து இன்று வீதிகள் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், கண்டாவளை பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்பாலத்தின் அபிவிருத்தி நடவடிக்கையின் போது பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டதுடன், இரண்டு உயிர்கள் பறிபோகவும், பலர் வீதி விபத்துக்களை சந்திக்கவும் நேரிட்டது. இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் துரித நடவடிக்கையால் குறித்த காலத்தில் பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.