MasalaDosa

9 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு

Reported by Ada Derana
4 days ago

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (23) உத்தரவிட்டார். இவர்கள் கடந்த 22ஆம் திகதி மாலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த 22ஆம் திகதி காலை இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இழுவைப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 9 இந்திய மீனவர்கள், அதே நாள் மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்ததாகக் கூறப்பட்டு தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர், பின்னர் விசாரணைகளின் பின்னர் நேற்று (23) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், குறித்த மீனவர்கள் நேற்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், குறித்த 9 மீனவர்களையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Original source: Ada Derana ↗