MasalaDosa

ஜப்பானின் குமமோட்டோவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: பலத்த சேதம், 50க்கும் மேற்பட்டோர் காயம்

Reported by Ada Derana
9 hours ago

ஜப்பானின் தெற்கு குமமோட்டோ பகுதியில் இன்று ரிக்டர் 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், விமான நிலையம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் மேலும் அதிர்வுகள் மற்றும் மண்சரிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்குப் பகுதியான குமமோட்டோவில் இன்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிக வளாகம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், தீப்பற்றியதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குமமோட்டோ கோட்டையின் சுவர்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிவேக ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. குமமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதைகளும் மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக, TSMC, Sony மற்றும் Fujifilm போன்ற முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகளிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் சுமார் ஒரு மீட்டர் உயர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது விலக்கிக்கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தால் அப்பகுதி அணுமின் நிலையங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் மேலும் நிலநடுக்க அதிர்வுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Original source: Ada Derana ↗