மண்டைதீவு புதைகுழி வழக்கு விசாரணை செப்டம்பர் 22க்கு ஒத்திவைப்பு
Reported by Ada Derana
9 hours ago
மண்டைதீவு புதைகுழி வழக்கின் விசாரணை இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் எடுக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக சான்றுகளை சமர்ப்பித்ததுடன், வழக்காளிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, 81 வயதான ஸ்ரிபன் மரில்டா மற்றும் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரின் முறைப்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
இன்று (28) காலை 10 மணிக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு, பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட பின் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
வழக்காளிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் செபமாலைமுத்து கிருஸ்ரபெலினா, காணாமல் போனோர் அலுவலக சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையானர்.
வழக்காளிகள் தரப்பில், அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும், அந்த காணியின் உரிமை யாருடையது என்பதை உறுதி செய்து கிராம சேவகர், பிரதேச செயலர், பிரதேச தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள், சட்ட விசாரணை அதிகாரி, பொலிஸார் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்தவும் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான நிதியை துறைசார் அமைச்சிடம் கோரி பெற ஏற்பாடு செய்யப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வழக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி, தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா மற்றும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த 17.09.2025 அன்று இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.