MasalaDosa

அக்டோபர் 01 முதல் காகிதமில்லா சுங்க அறிக்கை முறை அமுலுக்கு வருகிறது

Reported by Ada Derana
5 hours ago

வரும் அக்டோபர் 01 ஆம் திகதி முதல் காகிதமில்லா சுங்க அறிக்கை நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இது டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ASYCUDA அமைப்புடன் இணைந்து சுங்க சீராக்கல் செயல்முறையை திறமையானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்றும். இதனால் வேலை இழப்பு ஏற்படாது என ஜனாதிபதியின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (28) பிற்பகல் கொழும்பிலுள்ள SEMA கட்டிட கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசு சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார். புதிய நடைமுறை சுங்க சீராக்கலை மிகவும் திறமையானதாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்றும் என்றார்.

டிஜிட்டல் கையொப்பமிட்ட பின்னர் செய்யப்படும் மாற்றங்களை கணினி அமைப்பினால் கண்டறிய முடியும் என்பதால் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார். வர்த்தக அளவீடுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய நடைமுறை எவரது வேலையையும் பறிக்காது என்றும், தொழிலின் தன்மை மாறினாலும் சுங்க சீராக்கல் முகவர்களின் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

LankaSign டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ASYCUDA அமைப்பை ஒன்றிணைப்பதன் மூலம் அனைத்து சுங்க ஆவணங்களையும் சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் இணையவழியில் சமர்ப்பிக்க முடியும். புதிய நடைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்த அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Original source: Ada Derana ↗