"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" நடைபவனி!
Reported by Ada Derana
12 hours ago
இன்று (28) காலை யாழ்ப்பாண மாவட்டத்திலும் முல்லைத்தீவிலும் "நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் நடைபவனிகள் நடைபெற்றன. யாழ்ப்பாணத்தில் மாவட்டச் செயலகம் மற்றும் ஆளுநர் செயலகத்திலிருந்து தொடங்கிய நடைபவனி பல்வேறு வீதிகள் ஊடாக காலை 10 மணிக்கு மீண்டும் அந்த இடங்களை வந்தடைந்தது. முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வு நாடகத்துடன் தொடங்கி மாவட்ட செயலகம் வரை பேரணி நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் "நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" திட்டத்தின் நடைபவனி இன்று காலை 9 மணிக்கு மாவட்டச் செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் ஆரம்பமானது. மாவட்டச் செயலகத்திலிருந்து அதிகாரிகள், இளைஞர் சேவைகள் மன்றத்தினர், பொலிஸ் மற்றும் முப்படையினரும், ஆளுநர் செயலகத்திலிருந்து ஆளுநர், பிரதம செயலாளர், மாகாண அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றனர். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதம செயலாளர் தனுஜா முருகேசு, மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பிரதிப் பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ் கபிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நடைபவனி மாவட்டச் செயலக முன்பாகத் தொடங்கி, வைத்தியசாலை வீதி, வேம்படி சந்தி, முதலாம் குறுக்குத் தெரு, பிரதான வீதி, பஸ்ரியான் சந்தி மற்றும் கண்டி வீதி வழியாகச் சென்று காலை 10 மணியளவில் மீண்டும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் ஆளுநர் செயலகத்தை வந்தடைந்தது.
இதேவேளை, திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று முல்லைத்தீவிலும் பெரும் விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. காலை 9 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலக முன்றலில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் பேரணி ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகம் வரை நடைபெற்றது.