MasalaDosa

தேசிய நேர்மை வாரம் தொடக்கம்

Reported by Ada Derana
1 day ago

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 'நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய நேர்மை வாரம் இன்று (27) நாடளாவிய ரீதியில் தொடங்கப்பட்டது. வடமாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் சிறப்பு நிகழ்வுகளுடன் இது ஆரம்பமானது.

இன்று (27) முதல் ஜூலை 31, 2026 வரை நடைபெறும் 'நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய நேர்மை வாரம், அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.

'சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை' எனும் தொனிப்பொருளில் வடமாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் இந்நிகழ்வின் தொடக்க நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

வடக்கு மாகாண நேர்மை வார அறிமுக நிகழ்வு, இன்று திங்கட்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் பிரதான விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் வரவேற்புரையாற்றினார்.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சிவகுருநாதன் திருவாகரன் நேர்மையான சேவை தொடர்பில் சிறப்புரையாற்றினார், மேலும் நிகழ்வின் அடையாளமாக மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் தேசிய நேர்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரச சேவையில் நேர்மை மற்றும் ஒழுக்க விழுமியங்களைப் பேணி பொதுமக்களுக்குத் திறமையான சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர் உள்ளிட்ட பல பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குதல், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த அரச சேவையை கட்டியெழுப்புதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்நேர்மை வாரம் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாரத்தில் அரச நிறுவனங்களில் நேர்மைக் கலாசாரத்தை மேம்படுத்துதல், நிதி மற்றும் டிஜிட்டல் செயற்பாடுகளில் பொறுப்புணர்வை வலுப்படுத்துதல், தார்மீக விழுமியங்களை மேம்படுத்துதல் மற்றும் வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Original source: Ada Derana ↗